கூகுளில் வேலைசெய்யும் கறுப்பின இளைஞர் ஒருவர், தன்னை வளாக செக்யூரிட்டிகள் அப்புறப்படுத்தியதாகவும், தான் கூகுளில் வேலை பார்ப்பேன் என அவர்கள் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சாதியும் மதமும் இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போய் இருப்பதைப் போலத்தான் நிறவெறி இன்னும் அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
நான் ஒரு கனவு காண்கிறேன்... அது என் நான்கு குழந்தைகளும் வசிக்கும் தேசத்தில், அவர்கள் தோலின் நிறத்தால் பேதப்படுத்தப்பட மாட்டார்கள். பதிலாக, அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள் என்று மார்டின் லூதர் கிங் முழங்கினார். அவரது கனவு முழுமையாக நிறைவேறவில்லை என்பதை நிரூபிக்க இன்னும் ஏதாவது சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றவர் ஏஞ்சல் ஒனுஹா. இவர் கூகுள் நிறுவனத்தில் அசோசிடே ப்ராடக்ட் மேனேஜர் என்ற பதவி வகிக்கிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஏஞ்சல் அலுவலகத்துக்குச் செல்ல வாயிலில் இருந்த பாதுகாவலர்கள் இவர் கூகுளில் வேலை செய்வார் என நம்பவில்லை. அவரது பைக்கை தடுத்து நிறுத்திய காவலர்கள் அவரது ஐடி கார்டை பரிசோதித்தனர். பின்னர் அதை சோதனை செய்ய வேண்டும் என்று எடுத்துச் சென்றனர். இதனால் அன்று மாலை ஏஞ்சலால் அலுவலகப் பேருந்தில் வீடு திரும்ப முடியவில்லை. இரண்டு நாட்கள் கடந்த கடுமையான மன உளைச்சலுக்குப் பின்னர் ஏஞ்சல் ஒனுஹா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஏஞ்சல் ஒனுஹா கூகுளின் மவுன்டன் வியூவ் கலிஃபோர்னியா அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தங்கள் ஊழியரின் மனவேதனை கவனத்தில் கொள்ளப்படுகிறது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் செய்தித்தொடர்பாளர் தரப்பில் இச்சம்பவம் குறித்து, கூகுள் ஊழியர்கள் தங்கள் பணி அடையாளத்துக்காக அணியும் பேட்ஜில் நிர்வாக ரீதியாக சில குளறுபடிகள் இருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். பேட்ஜ்களை சரிபார்ப்பது அலுவலகப் பாதுகாவலர்களின் பணியின் ஒரு பகுதி என்பதை ஊழியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பேட்ஜ் விவகாரத்தில் உள்ள நிர்வாகக் குளறுபடி சரிசெய்யப்படும். கூகுளின் ஒவ்வொரு ஊழியரும் இது எங்களின் பணியிடம் என்பதை உணரும் வகையில் செயல்படுவதே எங்களின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூகுளில் வேலை பார்க்கும் கறுப்பின ஊழியர்கள் என்னவோ நிறுவனத்தில் தாங்கள் இன்னும் முழுமையாக செளகரியமாக உணர முடியவில்லை எனக் கூறுகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்டு என்ற கறுப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் கூகுளின் நிலைப்பாடு அதிருப்தியளித்ததாக கறுப்பினர் ஊழியர்கள் கூறுகின்றனர். கறுப்பினத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் எழும் அழுத்தத்தை, சுமையை ஒவ்வொரு முறையும் உணர்வதாக கூகுளின் ஊழியர் ஒருவர் கூறுகின்றார்.
2020 ஆம் ஆண்டு கேலப் என்று நிறுவனம் பணியிடங்களில் நிலவும் நிற பேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் பெரும்பாலான கறுப்பினர் ஊழியர்கள் பெருந்தொற்றுக்குப் பின்னர் அமலுக்கு வந்த வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தங்களைப் போன்றோருக்கு பணியிடத்தில் ஏற்படும் நிற பேதத்தில் இருந்து தப்பிக்க வழிவகை செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
எனக்கொரு கனவு இருக்கிறது… எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்ற தனது நம்பிக்கைக்கு ஏற்ப ஒருநாள் இந்த தேசம் எழுச்சி பெறும், அந்த நம்பிக்கையின்படி இந்த தேசம் செயலாற்றும் என்று எனக்கொரு கனவு இருக்கிறது என்ற மார்ட்டின் லூதரின் கனவு வாக்கியத்துக்கான அவசியம் இன்றும் இருந்து கொண்டேஹ்தான் இருக்கிறது.