மாசுபாடு காரணமாக 2019ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
The Lancet Commission மாசுபாடு காரணமாக உயிரிழந்தோர் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் போர், தீவிரவாதம், மலேரியா, எயிட்ஸ், டிபி, போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களை விட மாசுபாடுகாரணமாக உயிரிழந்தவர்கள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் மாசுபாடு நிறைந்த காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உடனடியாக இறப்பது அரிது தான் என்றாலும், இருதய நோய், கேன்சர், சுவாசப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தீவிர நோய்களால் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களில் சுமார் 67 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழந்தவர்கள் என்றும், காற்று மாசு பெரும்பாலும் நிலக்கரியை எரிப்பதாலும், பெட்ரோலிய பொருட்களை எடுப்பதாலும் தான் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் ஃபுல்லர், சுத்தமான மற்றும் பசுமையான புறவெளியை நம்மால் உருவாக்க முடியவில்லை என்றால் நாம் மோசமான தவறை செய்கிறோம் என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார். வேதியியல் மாசுபாடுகூட சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அளவிற்கு உலக அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று கூறியுள்ளார்.
முன்கூட்டியே உயிரிழந்தவர்களில் 6 பேரில் ஒருவர் அல்லது 90 லட்சம் பேர் மாசுபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையானது கடந்த 2015 முதல் அப்படியே தொடர்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, முன் கூட்டியே உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரனங்களாக தொழிற்சாலைமயமாக்கல், சுற்றுப்புற காற்று, வேதியியல் மாசுபாடு ஆகியவை குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உயர்ந்து வருவதாக எச்சரித்துள்ளது.
சுற்றுப்புற காற்று மாசுபாடு காரணமாக மட்டும் 2019ம் ஆண்டில் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2015ல் உயிரிழந்தவர்களை விட இந்த எண்ணிக்கை 3 லட்சம் அதிகம் என்றும் இந்த இறப்பு விகிதமானது 2000வது ஆண்டில் 29 லட்சமாக இருந்தது அடுத்த 20 ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதையும், சுற்றுப்புறச்சூழல் தீவிரமாக மோசமடைந்து வருகிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
காற்று மாசுபாடு உயர்ந்து வரும் அதே வேளையில் வேதியியல் மாசுபாடும் உயர்ந்து வருகிறது என்று எச்சரித்துள்ள அந்த அறிக்கை, இதன் காரணமாக 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.
மாசுபாடுகளால் ஏழை நாடுகளில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகும், இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும், இருதய நோய்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஃபுல்லர் தெரிவித்துள்ளார். இந்த முன்கூட்டிய இறப்புகளால் உலகம் முழுவதும் 4.6 ட்ரில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது உலகப் பொருளாதாரத்தில் 6 சதவீதம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.