சீனாவின் தைவான் பகுதியில் ஜூடோ தற்காப்பு விளையாட்டு மிகவும் பிரபலமான ஒன்று. இந்த விளையாட்டை அங்கு நிறையே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். அந்தவகையில் ஒரு 7 வயது சிறுவன் ஆசையாக ஜூடோ கற்க சென்றது அவருடைய உயிருக்கே பெரிய ஆபத்தாக அமைந்துள்ளது. அப்படி விபரீதம் நடக்க காரணம் என்ன?
தைவான் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஹூவாங். இவருக்கு நீண்ட நாட்களாக ஜூடோ விளையாட்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. இதற்காக பயிற்சியில் சேர்த்துவிடுமாறு தன்னுடைய வீட்டில் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இவருடைய பெற்றோர் ஜூடோ பயிற்சிக்கு சேர்த்துள்ளனர். அங்கு பயிற்சி வகுப்பின்போது சக மாணவர்களுடன் ஜூடோவில் வீரரை கீழே தள்ளுவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஹூவாங் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் இவரை பலர் கீழே தள்ளியுள்ளனர். தொடர்ந்து பலருடன் இவரை ஜூடோ சண்டை செய்யுமாறு பயிற்சியாளர் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக பல முறை மற்ற வீரர்களால் கீழே தள்ளி விடப்பட்டுள்ளார். இறுதியில் இவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அப்போது இவர் நடிப்பதாக கூறி பயிற்சியாளர் அலட்சியம் காட்டியுள்ளார். இறுதியில் அச்சிறுவனின் உடல் நிறமும் மாற தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் சிறுவனை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அச்சிறுவனை பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அச்சிறுவனின் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அந்த காயங்கள் ஒரு கார் விபத்து நடந்தால் ஏற்படும் காயங்கள் போல் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து அச்சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகும் அச்சிறுவன் வென்டிலேட்டர் உதவியுடன் சுய நினைவை இழந்து இருந்தார். 50 நாட்களுக்கு மேலாகியும் அவருடைய உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை. இதனால் அச்சிறுவன் மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் வென்டிலேட்டரை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் நேற்று அச்சிறுவனுக்கு அழித்து வந்த ஆக்சிஜனை நிறுத்த குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அச்சிறுவன் மரணம் அடைந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அச்சிறுவனை பயிற்சியில் 27 முறைக்கு மேல் கீழே தள்ளிவிட பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த பயிற்சியாளர், "ஹூவாங் அத்தனை முறை ஒன்றும் கீழே தள்ளப்படவில்லை" என்று கூறி வருகிறார். ஏற்கெனவே இந்த பயிற்சியாளர் ஜூடோ பயிற்சி என்ற பெயரில் சிறுவர்கள் சிலரை கொடுமைப்படுத்துவதாக சில புகார்களும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவனின் இறப்பு தொடர்பாக தொடர்ந்து தைவான் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: இளவரசி டயானாவுக்கு சார்லஸ் அளித்த பரிசு! இத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது ஃபோர்டு எஸ்கார்ட் கார் !