ரஷ்யாவில் நேற்று 6.9 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷ்யாவில் அவசர அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 


உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.06 மணியளவில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் நடுக்கம் உணரப்பட்டது.






நேற்று பதிவான இந்த நிலநடுக்கம் ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு தெற்கே சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் 100 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்கோவிற்கு கிழக்கே கிழக்கே 6,800 கிமீ தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள வீடுகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பெரியளவில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் ரஷ்ய அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு சென்று யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என ஆய்வு செய்து வருகின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழப்பு மற்றும் அழிவு எதுவும் இல்லை” தெரிவித்துள்ளது. 






இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக ரஷ்ய அறிவியல் அகாடமி புவி இயற்பியல் ஆய்வின் கம்சட்கா கிளை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவு 6.6 என்று கூறியது. அதன் பிறகே 6.9 என கண்டறியப்பட்டுள்ளது. 


மேலும், நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தகவல் தெரிவித்தது. 


கடந்த மார்ச் 8 அன்று கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு கடற்கரையில் 6.1 நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், ஒரு மாதத்திற்குள் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் .கடந்த மாதத்திற்கு பிறகு, அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.