கொலம்பிய நாட்டில் சிறையில் இருந்து தப்பியோட முயன்ற 49 கைதிகள் பலியாகினர். இதனை அந்நாட்டு தேசிய சிறைச்சாலை முகமை உறுதிப்படுத்தியுள்ளது. தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள சிறையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.


தேசிய சிறைச்சாலை மைய செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சுகிறோம். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிறையில் ஏற்பட்ட தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலின்போது ஏற்பட்ட தீ விபத்தே சிறையில் பரவியது என்றும் கூறப்படுகிறது.


இது ஒரு வேதனையான நிகழ்வு. அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மோதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சில கைதிகள் மோதலின்போது மெத்தைக்கு தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது என்று சிறைச்சாலை முகமை தலைவர் ஜெனரல் டிடோ கேஸ்டெலனோஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அதிபர் இவான் டூக் கூறுகையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் நடந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று குறிப்பிடாமல் ட்வீட் செய்துள்ளார்.


லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறைக்கலவரங்கள் புதிதல்ல. 2021ல் ஈகுவேடார் நாட்டில் நடந்த 6 சிறைக் கலவரங்களில் 400 கைதிகள் பலியாகினர்.


தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. அங்குள்ள கைதிகள் இடையே போதை மருந்து கடத்தல் குழுக்கள் அதிகாரப் போட்டி கடுமையாக மோதிக் கொள்வது சகஜமானது. இப்படித்தான் கடந்த 2021ல்நடந்த 6 சிறைக் கலவரங்களில் 400 கைதிகள் பலியாகினர்.


ஈக்வடார் நாட்டில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சிறிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துவந்த பலரையும் அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்திருந்தது. எனவே, இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெருங்குற்றங்களான கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் தண்டனை பெற்றுவருபவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது.


கடந்த சில ஆண்டுகளாகவே ஈக்வடார் சிறைச்சாலைகளில் கலவரங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஈக்வடார் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், ஒரே நேரத்தில் 27,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், அங்குள்ள சிறைச்சாலைகளில் தற்போது 38,000 கைதிகள்அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிறைக் காவலர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஈக்வடார் சிறைச்சாலைகளில் காவலர்களின் கையைவிட கைதிகளின் கையே ஓங்கியிருக்குமாம். இதன் காரணமாகத்தான் அங்கு எளிதாக கோஷ்டி மோதல்கள் அடிக்கடி அரங்கேறுவதாக கூறப்படுகிறது.