ஹாங்காங் நாட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரின் போலீசார் கைது செய்துள்ளனர். 

Continues below advertisement

கடந்த மூன்று தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் ஏழு உயரமான கட்டிடங்களில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கிய குடியிருப்பு வாசிகளில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 300 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 26ம் தேதி தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுத்தடுத்து அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தொகுப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிடித்த 32 அடுக்குமாடி குடியிருப்பு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த கட்டடத்தின் வெளிப்புறம் மூங்கில் கட்டைகளால் சாரம் கட்டப்பட்டு வேலை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் திடீரென இந்த மூங்கில் கட்டைகளில் தீப்பிடித்து எரிந்தது. மொத்தமாக 8 குடியிருப்புகள் இருக்கும் அந்த வளாகத்தில் தீ அடுத்தடுத்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏழு கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. கட்டுமான வலைகளில் எழுந்த தீ மற்றும் பலத்த காற்றினால் எழுந்த தீப்பொறிகள் ஆகியவை மிக மோசமான விபத்தாக மாறியது. 

Continues below advertisement

உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரண்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரே நேரத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்பிலும் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் பலர் வயதானவர்கள், நோயாளிகள் என்பதால் மீட்பு பணி கடும் சிரமத்திற்கு உள்ளே நடைபெற்றது. 900 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர், 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் அவசர அவசரமாக நடைபெற்றது. 

இதனிடையே காணாமல் போன குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஒரு பிரத்யேக விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு இதே  நவம்பரில் ஹாங்காங்கில் ​​கவுலூனில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் எரிந்த  தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதுவே அங்கு மோசமான தீ விபத்தாக இருந்தது.

45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீ விபத்து தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து மீண்டு வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.