நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
நேபாளத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் பக்லுங் மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் இன்று அதிகாலை பக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆதிகாரி சவுர் பகுதியில் முதலிலும், அடுத்த அரைமணிநேர இடைவெளியில் குங்கா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை நேபாள் நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. பக்லுங் மாவட்டம் ஆதிகாரி சவுர் பகுதியில் அதிகாலை 1.23 மணிக்கு முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவானது.
அதன்பிறகு பக்லுங் மாவட்டம் குங்காவை அதிகாலை 2.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் உயிர்சேதம், பலி எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன.
நேபாளம் சுமார் 80 ஆண்டுகளாக நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியது. நவம்பர் 9 அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் மேற்கு நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் ஆறு பேர் இறந்தனர் மற்றும் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
ஏப்ரல் 2015 இல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 9,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 22,000 பேர் காயமடைந்தனர். இது 800,000 வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை சேதப்படுத்தியது.
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.