பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு தனியாருக்கு சொந்தமான லேடி மேரி ஜாய் 3 சென்று கொண்டிருந்தது.  இந்த கப்பலில் 35 ஊழியர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று முன்தினம் பாசிலன் மாகாணத்தில் உள்ள பலுக்-பாலுக் தீவின் அருகே சென்று கொண்டிருந்தப்போது தீடிரென தீப்பிடித்து கப்பல் முழுவதும் பரவியது. 


நள்ளிரவில் நடந்த விபத்தால் கப்பலில் பயணித்தவர்களில் பலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு தூக்க கலக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே சிறிது நேரம் ஆனது. இதனால் பலரும் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டிய  பயத்தில் கப்பலில் இருந்து கடலில் குதித்துள்ளனர். 


தீ விபத்து குறித்து உடனடியாக தகவலறிந்து கடலோர காவல்படை, கடற்படை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தொடங்கியது. விடிய விடிய மீட்பு பணிகள் நடத்த பசிலானின் ஆளுநர் ஜிம் ஹடமன் உத்தரவிட்டார். இந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  மேலும் கடலுக்குள் குதித்ததால் காணாமல் போன 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 230 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அதிக பாரம் ஏற்றப்பட்டதால் இந்த கப்பலில் தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதுவும் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் கப்பலில் 403 பேர் வரை பயணம் செய்யலாம் என்பதால் அதிக பாரம் ஏற்றப்படவில்லை என கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் கப்பல் கேப்டன் கப்பலை கரையை நோக்கி திருப்பியுள்ளார். கரைக்கும் கடலுக்கும் சிறிது தூரம் இருக்கும் நிலையில் பயணிகள் தப்பித்து விடுவார்கள் என நினைத்து இச்செயலை அவர் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 


பிலிப்பைன்ஸை பொறுத்தவரை அங்குள்ள தீவுகளில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாக பராமரிக்கப்படும் படகுகள், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக அமல்படுத்துதல் போன்றவை காரணமாக அடிக்கடி கடல் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதில் கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டோனா பாஸ் என்ற கப்பல் எரிபொருள் டேங்கருடன் மோதியதே மிகப்பெரிய கடல் விபத்தாக உள்ளது. இதில்  4,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.