பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து சும்மா பேசுறீங்களே தவிர அதைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஒண்ணுமில்லையே என சர்வதேச தலைவர்களுக்கு டோஸ்விட்டுள்ளார் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்.


கிரெட்டா துன்பெர்க், 2 ஆண்டுகளுக்கு முன்னர் 16 வயதாக இருந்தபோதே தனது பேச்சால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தப் பூமியை மனித குலம் சுரண்டும் விதத்தையும் அதில் உலகத் தலைவர்களின் மெத்தனத்தையும் ஐ.நா.வின் பாராமுகத்தையும் அவர் சரமாரியாக விமர்சித்தார். ஐ.நா. சபையே நடுங்கிப் போகும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. இப்போது அவர் மீண்டும் தனது துடிப்பான பேச்சு மூலம் கவனம் ஈற்றுள்ளார்.


இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் பருவநிலை மாற்றட விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலகின் 190 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஸ்வீடனின் கிரெட்டா துன்பெர்க்கும் சிறப்புப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். கிரெட்டாவுக்கு இப்போது வயது 18. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது போல் வயதுக்கும் அவரின் அறிவுக்கும் பெருமைக்கும் தொடர்பில்லை.


பருவநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகளிலும் பருவம் தவறிய மழை, வெள்ளம், பஞ்சம், பனிப்பிரதேசங்களில் பனிப்பாறகள் உடைந்து நொறுங்கி விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் கூட ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் பருவம் தவறிய மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இத்தாலி மாநாட்டில் கலந்து கொண்ட இளம் பிரதிநிகள் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர்.




நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய கிரெட்டா துன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து பேச என்னைப் போன்ற இளைஞர்களை அழைத்துவந்து மாநாடு நடத்துகிறீர்கள். ஆனால், நாங்கள் பேசுவது எதையாவது கவனமாக கேட்கிறீர்களா? இல்லவே இல்லை. நாங்கள் ஒருபுறம் பேசுகிறோம். நீங்களும் பேசுகிறீர்கள். 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். என்ன நடவடிக்கை தான் எடுத்துள்ளீர்கள் என்று கூற முடியுமா?.


மனிதர்கள் வாழ ஒரே ஒரு பூமி தான் இருக்கிறது. இன்னொரு பூமியெல்லாம் இல்லை. இன்னொரு கோளும் மனிதர்கள் வாழத் தகுதியுடன் கண்டறியப்படவில்லை. அதனால் நமக்கு இருக்கும் ஒரே வழி இப்போது நாமிருக்கும் இந்த பூமியை பாதுகாப்பது மட்டுமே. அதைச் செய்வோம். உலகத் தலைவர்கள் அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். சும்மா பேசிக் கொண்டே இருக்காதீர்கள் என்று கோப ஆவேசத்துடன் பேசியிருக்கிறார்.