உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில நாடுகளில் இரண்டாவது அலையும் வந்து சென்றுவிட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த ஊசியை செலுத்தி கொள்ள பல நாடுகள் தங்களுடைய மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. 


அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி கொள்ளும் மக்களுக்கு ஒரு லாட்டரி போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி செலுத்திய மக்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். மில்லியன் டாலர் வெக்ஸ் லாட்டரி என்ற போட்டியில் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெரும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தப் போட்டியின் வெற்றியாளரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த லாட்டரி போட்டியின் வெற்றியாளராக 25 வயதான ஜோயன் ஸூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இவருக்கு பரிசாக வழங்கப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடை மற்றும் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் மூலம் தரப்படுகிறது. மேலும் இந்தப் போட்டியின் மூலம் 100 சலுகை கார்டுகளும் பரிசாக வழங்கப்பட்டது. அது சுமார் 1000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 100 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 




இந்தப் போட்டியில் வென்ற ஸூ,”இந்தப் பணத்தை வைத்து சீனாவில் இருக்கும் என்னுடைய குடும்பத்தை முதல் வகுப்பில் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும். அத்துடன் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்க வேண்டும். இவை அனைத்தையும் சீனாவின் புத்தாண்டின் போது நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குள் சீனாவில் இருந்து சர்வதேச பயணத்திற்கு இருக்கும் தடை விலகும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இந்த பணத்தில் ஒரு பகுதியை அதற்கு செலவு செய்து மற்றதை ஒரு நல்ல முதலீட்டில் செலுத்த உள்ளேன். அப்போது தான் இந்தப் பணம் மூலம் நான் மேலும் லாபம் ஈட்ட முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 


ஆஸ்திரேலிய மக்கள் அதிகளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் போட்டி தொடங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் மூலம் பலர் கொரோனா தடுப்பூசியை வேகமாக செலுத்தி கொண்டனர் என்று அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த லாட்டரி போட்டியின் தரவுகளின்படி சுமார் 3 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: ‛எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...’ கடலில் இறங்கி உரையாற்றிய அமைச்சர்!