இத்தாலியில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.


வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணித்த பேருந்து, வேலையிலிருந்து வீடு திரும்பும் மக்களால் நிரம்பியிருந்தது என்று வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். பேருந்து சாலையில் இருந்து முற்றிலுமாக நீங்கி மேம்பாலத்தில் இருந்து கிழே விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து நடந்ததை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.





 தொடர்ந்து பேசிய வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ முதல்கட்டமாக 18 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. கீழே விழுந்த காரணத்தால் பேருந்து தீப்பற்றி எரிந்தது. அதில் பயணித்த மக்கள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டனர்” என தெரிவித்தனர்.  18 பேராக இருந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 21 பேராக உயர்ந்துள்ளது. இதில் 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.


வெனிஸ் நகராட்சியின் பொது இயக்குனர் மோரிஸ் செரோன் கூறுகையில், ” விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் உக்ரைன், பிரெஞ்சு, குரோஷியன் மற்றும் ஜேர்மன் பிரஜைகளும் அடங்குவர்” என குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  






இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி எக்ஸ் தளத்தில், “மேஸ்ட்ரேயில் நிகழ்ந்த விபத்துக்கு எனது தனிப்பட்ட மற்றும் அரசாங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.  






பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "வெனிஸில் நடந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தோரின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  






“இன்று மாலை மேஸ்ட்ரேயில் நடந்த பேருந்து விபத்து மிகவும் கவலையடையச் செய்துள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என  ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.