கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் தற்போது அடுத்த ரவுண்ட் லே ஆஃப் செய்ய தயாராகிவிட்டது.


இது தொடர்பாக தொழில்துறை கண்காணிப்பு அமைப்பு ஒன்று, ஆயிரக்கணக்கானோரை கடந்த சில மாதங்களில் பணி நீக்கம் செய்தும்கூட வருமானம், பங்குச்சந்தை நிலவரம் ஆகியனவற்றைப் பார்க்கும்போது மீண்டும் பணி நீக்கங்கள் சில நிறுவனங்களில் இன்னும் அவசியமாகிறது. இந்தமுறை நிதி மற்றும் சுகாதாரத் துறைகளும் லே ஆஃபை சந்திக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.


2019 கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் ஒரு ஊழியர் வருமானத்திற்கு அளித்த பங்களிப்பின் சராசரி அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதுதான் ஒரு கம்பெனியின் வளர்ச்சிக்கான சரியான அளவுகோல். ஊழியரின் பங்களிப்பு குறைந்ததற்கு விற்பனை சரிவு காரணமாக இருக்கலாம். இல்லையேல் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு முன்னர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸின் ஊழியர்கள் வருவாய் பங்களிப்பு 2019ல் கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட 2002ல் 14 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிலையில் தான் அந்நிறுவனம் அடுத்த ரவுண்ட் லே ஆஃபுக்கு தயாராவதாக தெரிகிறது.


இதே பிரச்சனையால் பேஸ்புக்கை தொடர்ந்து 12 நிதி நிறுவனங்கள் மற்றும் 10 சுகாதாரத் துறை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லே ஆஃப் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தயார்நிலையில் அமேசான்


மெட்டாவை தொடர்ந்து அமேசான் டாக் காம் இன்க் நிறுவனமும் பணி நீக்கத்துக்கு தயாராகி வருகிறது. ஏற்கெனவே அந்நிறுவனம் 18 ஆயிரம் பேரை நீக்கியது. அது அந்நிறுவனத்தில் 15 லட்சம் ஊழியர்களில் வெறும் 1.2 சதவீதம் மட்டுமே. இருந்தும் அமேசான் பங்குகள் சரிவில் செல்வதால் இன்னும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் தயாராகி வருகிறது.


உலகெங்கும் பணிநீக்கம்:


உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அண்மையில் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும்.  அதை தொடர்ந்து, அமேசான் நிறுவனமும், சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. 


தொடர்ந்து,  உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதால் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.  அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களையும், ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ், ஷாப்பி மற்றும் ஜூம் ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டன.