Watch Video: போர்ச்சுகலில் சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்:
தெற்கு போர்ச்சுகலில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு சிறிய விமானங்கள் மோதிக்கொண்டன. இதில், தரையில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி உயிரிழந்ததாக ஊடக அறிக்கை வாயிலாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, "பெஜா ஏர் ஷோவில் மாலை 4:05 மணிக்கு (1505 ஜிஎம்டி) ஆறு விமானங்களை உள்ளடக்கிய வான்வழி சாகசத்தின் போது இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிப்பதில் விமானப்படை வருந்துகிறது" என்று ஒரு குறுகிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும் விமானப்படை வீரர்களின் பயிற்சிக்காக சோவியத்தால் வடிவமைக்கப்பட்ட Yakovlev Yak-52 விமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
விமானி உயிரிழப்பு:
விபத்து தொடர்பான தகவல் அறிந்ததுமே அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பெஜா விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. தரையில் விழுந்து நொறுங்கிய ஒரு விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளார். இதனிடையே, விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
போர்ச்சுகல் செய்தித்தாள்கள் சாட்சிகளை மேற்கோள் காட்டி ஆறு விமானங்களும் "யாக் ஸ்டார்ஸ்" என்ற ஏரோபாட்டிக் குழுவின் ஒரு பகுதியாக சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்துள்ளன. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய சிவில் ஏரோபாட்டிக்ஸ் குழு என கூறி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
விபத்து தொடர்பான வீடியோ:
வீடியோவின்படி, ஆறு விமானங்கள் பலத்த சத்தத்துடன் அதி வேகத்தில் வானில் சீறிபாய்ந்தபடி சாகச பயணத்தை மேற்கொண்டன. அப்போது ஒரு விமானம் மட்டும் தாழ்வாக பறந்து திடீரென, செங்குத்தாக மேல்நோக்கி பறக்க தொடங்கியது. அந்த வகையில் உயரே பறந்துகொண்டிருந்த 5 விமானங்களுக்கு நடுவே சீறிப்பாய, எதிர்பாராத விதமாக மற்றொரு விமானத்தின் மீது மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வானில் இருந்து சுழன்றபடியே தரையை நோக்கி வேகமாக சென்று பலத்த சத்ததுடன் கீழே விழுந்து நொறுங்கியது. அதேநேரம், மோதிய விமானம் அதிருஷ்டவசமாக, எந்தவித பெரிய பாதிப்பும் இன்றி தப்பியது.