USA Terror Attack: அமெரிக்காவில் 2025ம் ஆண்டின் முதல் நாளிலேயே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டின் முதல் நாளில் 15 பேர் பலி
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் அதிகாலையில் திரண்டு புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருத்ந், மக்கள் கூட்டத்தின் மீது பிக்கப் டிரக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்ற ஒருவர் மோதியுள்ளார். இதில் 15 பேர் படுகாயமைடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து ரத்த தானம் செய்து வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி
நியூ ஆர்லியன்ஸில் கார் மோதிய சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, 42 வயதான ஷம்சுத் தின் ஜாஃபார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் 'பயங்கரவாதச் செயலைச் செய்யும் போது ஐஎஸ்ஐஎஸ் கொடியை ஏந்தியிருந்தார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போர்பன் ஸ்ட்ரீட் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் பல சந்தேகத்திற்குரிய வெடிபொருட்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ ஆர்லியன்ஸ் போலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டபடி, சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் ஜாஃபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர் தாக்குதல்கள்:
அமெரிக்காவில் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே, இதுபோன்ற பல தாக்குதல்கள் நடந்துள்ளன. சில சம்பவங்கள் தீவிரவாத அரசியலால் ஈர்க்கப்பட்ட நபர்களாலும், சில மனநோய் அல்லது பெண் வெறுப்பின் காரணமாகவும் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டன. பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ள இடத்தில் காரை மோதி விபத்தை ஏற்படுத்துவது அல்லது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஆகியவை அவ்வப்போது அங்கு அரங்கேறி வருகின்றன.
தலைவர்கள் கண்டனம்:
அதிபர் பைடன் சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “"எந்தவிதமான வன்முறைக்கும் எந்த நியாயமும் இல்லை, மேலும் எங்கள் நாட்டின் எந்தவொரு சமூகத்தின் மீதும் எந்த தாக்குதலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “"நம் நாட்டில் இருக்கும் குற்றவாளிகளை விட, வெளியில் இருந்து வரும் குற்றவாளிகள் மிகவும் மோசமானவர்கள் என்று நான் சொன்னபோது, அந்த அறிக்கையை ஜனநாயகவாதிகள் மற்றும் போலி செய்தி ஊடகங்கள் தொடர்ந்து மறுத்தன. ஆனால் அது தற்போது உண்மையாக மாறியுள்ளது. எங்கள் நாட்டில் குற்ற விகிதம் இதுவரை யாரும் கண்டிராத அளவில் உயர்ந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்காக வருந்துகிறேன், இதுதொடர்பான விசாரணைக்கு ட்ரம்ப் நிர்வாகும் முழு ஆதரவு அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.