மே 13, 2022 - வெள்ளிக்கிழமை
இந்தியாவில் அஷ்டமி, நவமி, தேய்பிறை என்றெல்லாம் நாள், கிழமை பார்த்து சுப காரியங்களைத் தொடங்குவதையும் தள்ளிப் போடுவதையும் பார்த்திருப்பீர்கள். பூனை குறுக்கே போனது, கழுதை நடுவே சென்றது என்று சிலர் சகுனம் பார்ப்பதையும் கடந்து வந்திருப்பீர்கள்.
'ஆனால் இத்தகைய மூட நம்பிக்கைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இல்லை' என்று சிலர் பெருமை பாடுவதையும் பார்த்திருப்போம். ஆனால் அங்கும் குறிப்பிட்ட சில நம்பிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
அதென்ன 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை?
மேற்கத்திய நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளிக்கிழமையன்று வரும் 13ஆம் தேதி ராசியில்லாத தினமாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தில் எந்த ஒரு புதிய காரியத்தையும் வெளிநாட்டினர் தொடங்குவதில்லை. இந்த தினம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாமா?
கிரிகோரியன் காலண்டரில் ஒரு மாதத்தின் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வந்தால், அந்த நாள் ராசியற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையும் அதிகபட்சமாக 3 முறையும் 13-ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வருகின்றன.
உதாரணத்துக்கு 2015ஆம் ஆண்டு 3 முறை 13-ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் வந்த நிலையில், 2022ஆம் ஆண்டான இந்த முறை இன்று (மே 13) மட்டும் 13-ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வருகிறது.
என்ன காரணம்?
யேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில், யேசு கிறிஸ்து மற்றும் அவரின் சீடர்கள் என மொத்தம் 13 பேர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை யேசு தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை துக்ககரமான, ராசியில்லாத நாளாகக் கருதப்படுகிறது.
என்னெவெல்லாம் செய்யக்கூடாது?
இந்த நாளில் குறிப்பிட்ட 13 விஷயங்களைச் செய்யவே கூடாது என்பதை மேற்கத்திய மக்கள் நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். அவை என்ன?
1. ஏணிக்கு அடியில் நடக்கக்கூடாது.
2. கண்ணாடியைத் தவறுதலாக உடைத்து விடக்கூடாது.
3. மூச்சுத் திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
4. விற்பனை இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
5. குடையை உட்பக்கமாகத் திறக்கவே கூடாது.
6. உப்பைக் கீழே கொட்டிவிடக்கூடாது. (தெரியாமல் கொட்டிவிட்டால், கொஞ்சம் உப்பை எடுத்து இடது தோள் வழியே கீழே போட வேண்டும். இல்லையெனில், சபிக்கப்பட்ட வாழ்க்கையே அமையும் என்று நம்புகின்றனர்.)
7. இருட்டுச் சந்தில் தனியாக நடக்கக்கூடாது.
8. ஜன்னல் வழியாக ஆந்தையைப் பார்த்து விடவே கூடாது.
9. கண் கருவிழிகளை உருட்டி ஒரு பக்கமாகக் கொண்டு வரக்கூடாது. (அப்படிச் செய்தால் விழிகள் அப்படியே நின்றுவிட வாய்ப்புண்டு என்று நம்புகின்றனர்.)
10. முடி மற்றும் நகங்களை வெட்டக்கூடாது.
11. நகரத்தின் பயங்கரமான, மோசமான இடங்களுக்குச் செல்லக்கூடாது.
12. இடிந்து, நொறுங்கிய பகுதி மீது கால் வைக்கக்கூடாது.
13.கறுப்புப் பூனையைக் கடந்து செல்லக்கூடாது.
இந்தத் தேதியை நினைத்து அச்சப்படும் மனநிலையை, ட்ரிஸ்கைடேகாபோபியா (Triskaidekaphobia) என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
ஒரே தேதி வேறு கிழமை
கிரேக்க கலாச்சாரத்தில் செவ்வாய்க்கிழமையன்று வரும் 13ஆம் தேதியை, ராசியில்லாத நாளாகக் கருதுகின்றனர். இதுவே இத்தாலி நாட்டில், 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மோசமான நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஃபின்லாந்தில், மத்திய சமூக விவகாரங்கள் மற்றும் சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தினத்தை நடத்துகிறது. ஒவ்வொரு முறையும் இந்த நாள் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே 1993ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 13ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் சாலை விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியானது, அறிவியல் உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
தொழில்கள் பாதிப்பு
வடக்கு கரோலினாவில் உள்ள மன அழுத்த மேலாண்மை மையம் மற்றும் ஃபோபியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் 1.7 கோடி முதல் 2.1 கோடி மக்கள் இந்த நாள் குறித்த பயத்தில் உள்ளனர். இதனால், அன்று விமானத்தில் செல்வதையோ ஏன் வேலைக்குச் செல்வதையோகூடத் தவிர்க்கின்றனர். இன்னும் சிலர் படுக்கையை விட்டே எழுவதில்லை. இதனால் அந்த நாளில் வணிகம் 800 முதல் 900 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வணிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இவ்வாறான அமானுஷ்யங்கள் நிறைந்த 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று மீண்டும் பிறந்துள்ளது.