சீனாவில் காதலர்கள் 10 நிமிடங்கள் இடைவிடாமல் முத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில், காதலன் கேட்கும் திறனை இழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக அன்பை பறிமாறிக்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று முத்தம் கொடுப்பது. அதிலும் காதலர்கள் என்றால் சொல்லவா வேண்டும். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை முத்தங்களே சொல்லி விடும். இப்படி அன்பை  பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம் தான் என கூறப்படும் நிலையில் அதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ள சம்பவம் உலகமெங்கும் இருக்கும் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


அதேசமயம் முத்தம் கொடுப்பதால், அதிலும் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில்  நரம்பு மண்டலங்கள் உட்பட பல இடங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  ஆனால் இதில் பாதிப்புகளும் உள்ளது என்பது சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி கொடுத்த முத்தம் மூலம் தெரிய வந்துள்ளது.


சம்பந்தப்பட அந்த காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். அப்படியான நிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் 'லிப்லாக்' எனப்படும் உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் முத்தம் கொடுத்ததாக சொல்லப்படும் நிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவிக்க, முத்தம் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். சிறிது நேரம் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் அந்த இளைஞனின் காதில் ஏற்பட்ட வலி மட்டும் குறையவே இல்லை. 


உடனடியாக இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கேட்கும் திறனை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பரிசோதனையில் காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புறத்தை பிரிக்கும் ஒரு மெல்லிய சவ்வில் இரண்டு துளைகள் இருப்பது தெரிய வந்தது. முத்தம் கொடுக்கும் போது காதில் ஏற்பட்ட காற்றழுத்தம் இத்தகைய பிரச்சினை ஏற்பட காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இந்த பிரச்சினைக்கு 2 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முத்தத்தால் இளைஞரின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட சம்பவம் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.