ஹெட்ஃபோன், இசை நிகழ்ச்சிகளால் உலகில் 1 பில்லியன் இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆடை அணிந்து கொள்வது போல் காதில் ஏர்பாட், ஹெட்போன், ப்ளூடூத் ஹெட்செட் என ஏதாவது ஒன்றை அணிவதை இயல்பாக்கியுள்ளது நாகரிக காலம். அதுமட்டுமல்லாது இப்படியான நவநாகரிக பழக்கங்களின் பக்க விளைவுகளும் அதிகரித்துக் கொண்டே தான் செய்கின்றன.
உலக சுகாதார அமைப்பு உதவியுடன் அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஹெட்ஃபோன், இசை நிகழ்ச்சிகளால் உலகில் 1 பில்லியன் இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் உலக நாடுகள் தங்கள் மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள் இதுபோன்ற ஹியரிங் உபகரணங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
BMJ Global Health மருத்துவ இதழில் தான் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன் என 33 ஆய்வுகள் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 12 வயது முதல் 34 வயதிலான 19 ஆயிரம் பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 24 சதவீத இளைஞர்கள் பாதுகாப்பற்ற ஹெட்ஃபோன் பயன்படுத்தும் பழக்கவழக்கங்களைக் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் 6,70,000 முதல் 1.35 கோடி வரையிலான இளைஞர்கள் செவித்திறன் இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.
நீண்ட கால தாக்கம்:
ஹெட்ஃபோன் பயன்படுத்துதல் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் சத்தமான இடங்களில் ஹெட்போன் பயன்படுத்தினால் அது வெளிப்புற சத்தத்தை கட்டுப்படுத்தும். அதனால் சத்தம் மிகுந்த இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது இயர்ப்ளக் அணிந்து கொள்ளலாம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது தொடர்ந்து காது பிளக்கும் சத்ததை ஏற்றுவந்தால் 60களில் செவித்திறன் முற்றிலும் போய்விடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகம் முழுவதும் 430 மில்லியன் பேர் அதாவது மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் மேலானோர் காது கேட்கும் குறைபாட்டு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 2050ல் இது 700 மில்லியனை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
ஹெட்ஃபோன் ஆபத்துகள் சில..
* நீங்கள் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறீர்கள் என்றால் உங்களுக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* காதுகளை முழுமையாக அடைக்கும் ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது. அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.