தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக வான்வழி, கடல் வழி, சாலை வழி, ரயில் வழி ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதியைக் கொண்ட துறைமுக நகரமான தூத்துக்குடி தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. ஆனால், முன்னேற்றத்துக்கு ஏற்ப போதிய ரயில் வசதி இல்லை என்ற குறைபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே தலா ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே ஒரு பயணிகள் ரயிலும், தூத்துக்குடி- ஓகா இடையே வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நகரங்களான தூத்துக்குடியையும், கோவையையும் இணைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி- கோவை இடையே ஒரு லிங்க் ரயில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.




நாகர்கோவில்- கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் 7 பெட்டிகள் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து அந்த ரயிலில் பிணைக்கப்படும். 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 7 பெட்டிகள் பிணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மூலம் தினமும் 600 பேர் வரை பயன்பெற்று வந்தனர். கொரோனா பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த ரயில் தற்போது (ஜூலை 2 முதல்) இணைப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.




தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்து நாகர்கோவிலில் இருந்து வரும் விரைவு ரயிலில் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். மறுவழித்தடத்தில்  கோவையில் இருந்து - தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தூத்துக்குடி வரும் ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 300 பேர் வரை பயணம் செய்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலர் பிரம்மநாயகம் கூறும் போது, கேரளத்தில் லிங்க் ரயில்களாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது தனி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.அதேபோல, தூத்துக்குடி- கோவை இடையே இரவு நேரத்தில் தனி ரயில் இயக்கப்பட வேண்டும். அல்லது தனி ரயில் இயக்கப்படும் வரை பழைய மாதிரி தூத்துக்குடி- கோவை இடையே பிணைப்பு ரயிலை இயக்கினால் மட்டுமே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தூத்துக்குடியில் இருந்து கரூர், திருப்பூர், ஈரோடு , கோவைக்கு செல்ல ஒரேயொரு ரயில் இருந்தது. அதற்கும் தூத்துக்குடியில் இருந்து லிங்க் ரயில் மூலம் மணியாச்சியில் காத்திருந்து சென்றுக்கொண்டிருந்தோம். அதை நிறுத்திட்டாங்க, பஸ்ஸில் போயிட்டு இருந்தோம், இப்போ  மீண்டும் அந்த ரயிலை இயக்குறாங்க, ஆனாலும் பிரயோஜனம் இல்லை, விடிய விடிய கண்விழிந்து மணியாச்சி வந்ததும் இறங்கி தூத்துக்குடி போகும் ரயிலை பிடித்து நடுஇரவில் ஏறி வரும் நிலை இருக்கு, இதை முன்பு போன்று இணைப்பு ரயிலாக விட்டால் நன்றாக இருக்கும். எங்க ஊர்ல கப்பல் இருக்கு, விமானம் இருக்கு. ஆனால் கூடுதலா ரயில்தான் இல்லை எனக்கூறும் இவர்கள் ரயில்வே நிர்வாகம் கொஞ்சம் கருணை காட்டனும் என்கின்றனர்.




இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கோவை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண