கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அடுத்த ஜல்லிவாட நாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வீர ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த குல தெய்வ கோவில் திருவிழா 2 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று எருது ஓட்டம் விமரிசையாக நடைபெற்றது. கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகளை அந்தந்த ஊர்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். சாமி வழிபாட்டிற்குப் பிறகு எருதுகளை சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச் சென்று அங்கிருந்து எருதுகளை ஓட்டி வந்தனர். 13 ஊர் மந்தை எனப்படும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்காக பாரம்பரியமாக வம்சாவழியாக தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். எருது ஓட்ட விழாவில் பங்கேற்று முதலாவதாக வரும் 3 காளைகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பரிசாக வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தோகமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, காக்காவாடி, ஏமுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமிஜி நேர்த்திக் கடனுக்காக எருது ஓட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகள், 5 ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் என நடைபெற்று வரும் திருவிழாவில் நாயக்கர் சமுதாய மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள பல்வேறு சமுதாய மக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி போலீசார் அனுமதி பெற்ற பிறகு நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த எருது ஓட்டும் திருவிழாவில் உறவு முறைகளை அழைத்து புத்தாடை உடுத்தி, சுவாமிக்கு படையல் இட்டு, அன்னதான வழங்கி அதைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சி உடன் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்