திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சிக்குட்பட்ட விளமல் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதினோரு வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக வளைகாப்பு ஏற்படுத்த அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் இந்த சமுதாய வளைகாப்பு.
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து காப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கருதப்படுவது பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்தல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள் மற்றும் குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எடுத்துக் கூறப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம் செட், வெற்றிலை பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம், பொட்டுக்கடலை, வளையல், தாம்பூலம், கடலைமிட்டாய், பூ என 11 வகையான சீர்வரிசை பொருட்களை மாவட்ட ஆட்சியர் அவர்களும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கார்த்திகா, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெனிபர்கிரேஸ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.