தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது தற்பொழுது குறைந்து காணப்பட்டு வருகிறது. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தே காணப்பட்டு வருகிறது இருப்பினும் தற்பொழுது உலகம் முழுவதும் புதிதாக 'ஓமிக்ரான்' எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமிக்ரான் பரவியது ஆனால் தற்பொழுது வரை தமிழகத்தில் பரவாத நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதங்களை போலவே பொது கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேக திருவிழாக்களில் போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு தொடர்ந்து தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருந்தார்.

 



இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19ஆம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20ஆம் தேதியும் நடக்கிறது. இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கே.ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் நவமணி தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பா.ஜ.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 



 

கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்து உள்ளது. அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். எப்பொழுதும் கோலாகலமாக கொண்டாடப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா மற்றும் கோயில் தேரோட்டம் இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததற்கு பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.