கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி, உரியவரிடம் கொண்டு சேர்த்த மரவியாபாரியின் நேர்மையை பாராட்டி போலீஸார் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
கும்பகோணம் முருக்கங்குடியை சேர்ந்த மரவியாபாரியான ராமதாஸ் என்பவர் கடந்த 17-ம் தேதி இரவு சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது ரூ.20,400 பணம் கத்தையாக கீழே கிடந்ததை எடுத்த அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும், அந்த பணத்தை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்த எவ்வளவு பணம் மற்றும் எந்த இடத்தில் கிடந்தது பணத்தை பெற்றுகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து வாட்ஸ்ப்குழுக்களில் பதிவு செய்தார் பாஸ்கர். அதன்படி கும்பகோணம் சாக்கோட்டையைச் சேர்ந்த உப்பிலி என்பவர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அது தன்னுடைய பணம் என்றும் கடந்த 17-ம் தேதி தொலைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று (19ம்தேதி) நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அவர் வரவலைக்கப்பட்டு அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பணம் தொலைந்தது எப்படி என விசாரித்தார்.
அப்போது தான் சாக்கோட்டையில் உள்ள பேக்கரியில் இருந்து பால்கோவா மற்றும் இனிப்புவகைகளை மொத்தமாக வாங்கி கும்பகோணம், பட்டீஸ்வரம், திருப்பனந்தாள், நாச்சியார்கோவில், சோழபுரம் பகுதிகளில் உள்ள சிறுசிறு கடைகளில் விற்பனை செய்துவிட்டு, வாரம் ஒருமுறை அந்த கடைகளுக்கு சென்று பணத்தை வசூல் செய்துவருவதாகவும் தெரிவித்தார். அதன்படி கடந்த 17-ம் தேதி திருப்பனந்தாள் பகுதியில் வசூலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று வசூல் செய்து வைத்திருந்த பணப் பையை பார்த்த போது அதில் இருந்த வசூல் பணம் ரூ.20,400 பணக்கட்டு காணாமல் போயிருந்தது. வரும் வழியில் விழுந்திருக்ககூடும் என எண்ணி வாகனத்தை எடுத்துக்கொண்டு தான் வந்த பாதை முழுவதிலும் தேடிச்சென்றேன். இரவு நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தியுடன் வீட்டுக்கு திரும்பி பணம் தொலைந்தது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறி அழுது புலம்பினேன் என தெரிவித்துள்ளார். பின்னர் தான் வசூல் செய்ததற்கான வரவு செலவு நோட்டுகளையும் போலீஸிடம் காண்பித்துள்ளார்.
இதையடுத்து தொலைந்தது அவரது பணம் என உறுதிசெய்த பிறகு அந்த பணத்தை கண்டெடுத்து கொண்டுவந்த மரவியாபாரி ராமதாஸ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரப்பிய அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோர் மூலம் நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி பணத்தை பறிகொடுத்த உப்பிலியிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்ற உப்பிலி கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி கூறினார்.
பின்னர் சாலையில் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த மரவியாபாரி ராமதாசுக்கு இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீஸார் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி பாராட்டினார்.