மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27 நாளை நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிரெதிர் அணியில் மோதுகின்றன. பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் மேற்கு வங்க திரைத்துறையினர் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நேரடியாக பாஜகவை குறிப்பிடவில்லை என்றாலும் , அதில் இடம் பெற்றுள்ள வரிகள் நேரடியாக பாஜகவை விமர்சிப்பதால் பிரசார களத்தில் அந்த பாடல் அனல் வீசிவருகிறது.
‛நாங்கள் அச்சப்படவில்லை, கோபப்படுகிறோம்’ என்பதை மைய வாசகமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் பாடலில் பாஜகவினர், பிரசாரத்தில் பயன்படுத்தும், ‘அச்சே தின், துக்டே துக்டே கேங்’ ஆகிய சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. ‛ஆக்கிரமிக்க வந்த உங்களுக்கு தேசபக்தி எப்படி புரியும்?, பாகிஸ்தானைத் தவிர உங்களுக்கு வேறென்ன தெரியும்?’ எனப் பாடலில் ஆங்காங்கே தீப்பொறி பறக்கிறது.
மேற்குவங்கத்தின் பழமை வாய்ந்த கலாச்சாரங்கள் வீடியோவில் ஆங்காங்கே காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் அந்த வீடியோ, ’சிட்டிசன்ஸ் யுனைடெட்’ என்கிற யூட்டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் அனிர்பன் பட்டாச்சார்யா, சப்யசாச்சி சக்ரபர்த்தி, பரம்ப்ரதா சட்டோபாத்யாயா ஆகிய முக்கிய மேற்கு வங்கக் கலைஞர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மேற்கு வங்க கலைஞர்களின் இந்த நிலைப்பாட்டை அறிந்த பா.ஜ.க., எதிர்பாளர்கள், தமிழகத்திலும் அதே போன்று திரைத்துறையினர் முன்னெடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.