விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தனர். 

 

உலக பட்டினி தினம் 


உலகளவில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலப் பட்டினியால் வாடுவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2011 ஆம் ஆண்டு முதல் உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இத்தினமானது நாள்பட்ட பட்டினியின் துயரத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பச் செய்வதோடு, நிலையான முயற்சிகள் மூலம் பட்டினி மற்றும் வறுமையைத் தீர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தபட்டு வருகிறது. 

 

தமிழக வெற்றிக் கழகம்


 

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு  மே 28-ம் தேதியான இன்று  தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய்யின் புதியதாக ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று  தெரிவித்திருந்தனர்.

 



அதனடிப்படையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு, விக்கிரவாண்டி பேருந்து நிலையம், வானூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட துணை தலைவர்  வடிவேல் தலைமையில் ஏழைகளுக்கு உணவளித்தனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற உணவளிக்கும் நிகழ்வில் நரிக்குறவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் மூலம் உணவளித்தனர்.