விழுப்புரம்: மகளிர் உரிமை தொகை பெற மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக வாட்சப் குழுக்களில் தவறான தகவல் பரவியதை தொடர்ந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களை சார்ந்த பெண்கள் விண்ணப்பிக்க திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் மூன்று நாட்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக வாட்சப் குழுக்களில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள திருவெண்னைய் நல்லூர், பெரியசெவலை, திண்டிவனம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகையை விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50 க்கும் மேற்படோர் வருகை புரிந்தனர்.


வருகை புரிந்த பெண்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேட்டபோது மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க வந்துள்ளதாகவும் எங்கு நடைபெறுகிறது என கேட்டு போலீசாரையே நமக்கு தெரியாமல் எங்கு நடைபெறுகிறது என சற்று அவர்களை தடுமாற செய்தது.


அதன் பின்னர் போலீசார் மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் எல்லோரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர்ப உரிமை தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு இருபுறமும் ஒட்டப்பட்டுள்ளன.


தொடர்ந்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர்...


விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகிய அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் இன்று(17.08.2024) விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக தவறான தகவல் சிலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை உண்மை என நம்பி பொதுமக்கள் எவரும் மேற்படி அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக முகாம் நடத்தப்படுவதாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும். மேலும், அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்புபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.