கடலூர் பெருநகராட்சி ஆக செயல்பட்டு வந்த இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் இயற்றப்பட்டு தமிழக அரசால் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாமக நகரம் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாநகராட்சி ஆணையரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது, கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் கூட மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் மாநகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை, கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் 40 டன் குப்பைகளும் ஆங்காங்கே பெரும்பாலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் கடலூரின் முக்கிய ஆறுகலில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றங்கரையில் நகராட்சியாக செயல்பட்டு வந்த காலத்தில் இருந்து தற்பொழுது மாநகராட்சியாக கடலூர் தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து மாநகராட்சி வாகனத்திலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் மாநகரம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து உள்ளன அதனை சீர் செய்வதற்கு இதுவரை மாநகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, குறிப்பாக மாநகர பகுதியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லை, மேலும் மாநகராட்சி சாலைகளில் பெரும்பாலான இடங்களில் விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன குறிப்பாக இதுவரை மாநகரத்தில் பன்றி கடித்து இரண்டு பேர் இறந்துள்ளனர் மேலும் நாய் கடித்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மாநகராட்சி பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இரண்டு முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை, அதன் காரணமாகவே தற்பொழுது இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு பின்னும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநகராட்சி கட்டடத்தின் கதவுகளை பூட்டி மாநகராட்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தி, நிழல் மாநகராட்சியை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என பாமக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.