புதுச்சேரி: ரூ.490 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வரும் 10-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,


 புதுச்சேரியில் பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை உட்பட 10 பொருட்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இந்தப் பொங்கல் பரிசுப் பொருட்களை வரும் 10-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.


புதுச்சேரியில் கொரோன விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். இலவசமாக முக கவசம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவையில் கூடுதலாக  10 ஆயிரம் முதியோர், விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விடுபட்ட 6 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




புதுவையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கன மழையால் சேதமடைந்த புதுவையின் அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சாலைகளும் புதிதாகப் போடப்படும்.


புதுவையில் கொரோன தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகளை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதித் தேர்வு வரும் 19ம் தேதி நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஐஆர்பிஎன் உட்பட ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


புதுவையில் முதல்வரும், ஆளுநரும், அமைச்சர்களும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் தான் வளர்ச்சியை கொண்டு வர முடியும். கடந்த காலங்களில் இதுபோல இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்பட்டு புதுச்சேரி அரசு நிர்வாகம் சீர்குலைந்தது. இப்போது அந்த நிலை இல்லை.




புதுவை ஆளுநர் தமிழிசையின் முழு ஒத்துழைப்போடு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல எந்தத் தடையும் இல்லை. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்வதை முதல்வர் தடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டுவதாகக் கேட்கிறீர்கள். இந்த ஆதாரங்களை என்னிடம் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம். புதுவை அரசு பொறுப்பேற்று 7 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களைச் செய்துள்ளோம்.


இன்னும் 5 ஆண்டுகள் உள்ளன. அனைத்து அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும். கொரோன பாதிப்பு அதிகமானால் ஆயிரம் படுக்கை அமைக்கும் வசதியுடன் கூடிய 3 இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். பேரிடரைத் தவிர்க்க டாக்டராக ஆளுநர் ஆலோசனை வழங்குவதில் என்ன தவறு உள்ளது. மாநில அந்தஸ்து கேட்டு ஆண்டு தோறும் வலியுறுத்துகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என்று ரங்கசாமி குறிப்பிட்டார்.