புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை 31 அடியை எட்டியதை அடுத்து மணிக்கு 3808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 2071 மூன்று மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


வீடூர் அணை


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.


வீடூர் அணை நிலவரம்


வீடுர் அணையானது 15,800 அடி நீளமும், 37 அடி உயரமும் கொண்டுள்ள இந்த அணையின் நீர்மட்டம் பிடிப்பு 32 அடியாகும். தற்போது 31 அடியை எட்டி உள்ளதாலும் 3808 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக 2071 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!


வீடூர் அணையின் முழு கொள்ளளவான 32 அடியில், 30.300 அடி நிரம்பியுள்ளது. மேலும், நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்று 22.10.2025 நன்பகல் 12.00 மணியளவில் வினாடிக்கு 500 முதல் 3,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.


எனவே, சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் குறிப்பாக, வில்லியனூர் தாலுக்காவில் இருக்கும் மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கொடாத்தூர் (குமாரபாளையம்), (கைக்கலப்பட்டு), தேத்தம்பாக்கம் செல்லிப்பட்டு, வம்புபட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புது நகர்- பிளாட்-II, பொறையாத்தம்மன் நகர், கோட்டைமேடு), மங்களம், உருவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுக்காவில் இருக்கும் NR நகர் & நோணாங்குப்த்தில் ஆற்றின் இரு கரையோரங்களில் இருப்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும், இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்ஃபி எடுப்பது போன்ற எந்த விதமான செயலிகளிலும் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பேரிடர் கால அவசர உதவிக்கு


பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 9488981070 என்கிற எண்ணில் வாட்சப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளர்.


காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு


இன்று மதியம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.


பின்னர் இது, வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த நிலை, புயலாக மாறுமா என்பதை இன்று தான் கணிக்க முடியும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ரெட் அலெர்ட்


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகனமழை, அதாவது, 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆரஞ்ச் அலெர்ட்


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று மிக கனமழை அதாவது, 11 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.


மஞ்சள் அலெர்ட்


சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்துார், தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில், நாளை மிக கனமழையும், வேலூர், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.