விழுப்புரம்: விழுப்புரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர். தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Continues below advertisement

புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் 

விழுப்புரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையினால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் சூழ்ந்தது.

இதனால் பேருந்துகள் தண்ணீரில் மிதந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று பேருந்து ஏறும் நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்ததி விழுப்புரத்தில் அதிக பட்சமாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், இந்திரா நகர் ரயில்வே பாலம், நகராட்சி பள்ளி மைதானம், புதிய பஸ் நிலையம் உட்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

Continues below advertisement

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

இதற்கிடையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

அவசர உதவிக்கு

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வியாழக்கிழமை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.