விழுப்புரம்: யானை தந்தத்தினால் செய்யப்பட்ட யானை  பொம்மைகள் விற்பனை தொடர்புடையவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வன உயிரின குற்றச்செயல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள்


யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு கும்பல் காரில் கடத்திக்கொண்டு வந்து விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து விற்பனை செய்வதாக தமிழ்நாடு வனம் மற்றும் சென்னை மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.


உடனே அங்குள்ள அதிகாரிகள், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் அறிவுரையின்பேரில் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர்.


யானை தந்தத்தை கொண்டு செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின


அப்போது அந்த விடுதியின் முன்பு ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அதில் 5 பேர், சாக்கு மூட்டைகளுடன் இருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் அதனுள் 4 யானை பொம்மைகள் இருந்தன.


அவற்றை கைப்பற்றி பார்த்ததில் அந்த 4 பொம்மைகளுமே யானை தந்தத்தை கொண்டு செய்யப்பட்டவை என்றும் இந்த பொம்மைகள் தஞ்சாவூர் பகுதியில் தயார் செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பொம்மைகள் என தெரிந்தது. மேலும் அந்த தங்கும் விடுதியின் அறையில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரையும் வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட 12 பேரையும், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.




12 பேரிடம் விசாரணை


விசாரணையில் அவர்கள் 12 பேரும் தஞ்சாவூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் காரில் வந்த 5 பேர், திருச்சி பகுதியில் இருந்து யானை தந்தத்தினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகளை காரில் கடத்திக்கொண்டு விழுப்புரம் வந்துள்ளனர்.


இவர்கள், அந்த 4 பொம்மைகளையும் விற்பனை செய்வதற்காக 7 பேரிடம் பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து விற்பதற்காக அவர்களை தங்கும் விடுதிக்கு வரவழைத்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் 7 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் விழுப்புரம் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்களிடம் காரில் வந்த 5 பேரும், யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை விற்பனை செய்ய முயன்றபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.




 பறிமுதல் செய்யப்பட்ட 4 பொம்மைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும்!


இதையடுத்து அவர்கள் 12 பேர் மீதும் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 4 யானை பொம்மைகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 4 பொம்மைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 12 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 



இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்தில் மண்டல வன அலுவலர் பொறுப்பு சதீஷிடம் வனத்துறை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்து விசாரனையை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி... தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அக்டோபர் 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல்வேறு வன உயிரின குற்றச்செயல்கள் கண்காணிக்கபட்டு வருவதாகவும், யானை தந்தத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மைகள் விழுப்புரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் 12 பேரை கைது செய்து 4 யானை பொம்மைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை தொடரும் என்றும் யானை பொம்மை கடத்தலில் தொடர்பு உடையவர்கள் மீது தொடர்ந்து விசாரனை செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிதிநிலைக்கேற்ப நிரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.