விழுப்புரம்: மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கும் பொழுது தவறி விழுந்து அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயமான நிலையில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கணேசன் ( வயது 50). இவரது மகன்கள் லோகேஷ் ( வயது (24), விக்ரம் (வயது 23), சூர்யா (வயது 23).  இதில் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இரட்டை பிறவிகள் ஆவர். இந்நிலையில் அண்ணன் தம்பிகள் 3  பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாலியாக தூண்டில் போட்டு மீன் பிடிக்க மரக்காணம் - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் பகுதியில் இருக்கும் பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று உள்ளனர். அங்கு அண்ணன் தம்பிகள் 3 பேரும் தூண்டில் போட்டு ஜாலியாக மீன் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.


அப்போது எதிர்பாராத விதமாக அண்ணன் லோகேஷ் தவறி பக்கிங்காம் கால்வாயில் விழுந்துள்ளார். இந்த கால்வாயில் ஃபெஞ்சல் புயலின் பொழுது பெய்த கன மழையில் இருந்து இன்று வரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கால்வாயில் தவறி விழுந்த லோகேஷ் வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளார்.


அண்ணன் வெள்ளத்தில் செல்வதை கண் எதிரிலேயே பார்த்த இரட்டை பிறவிகளான தம்பிகள் அண்ணனைக் காப்பாற்ற இவர்களும் கால்வாயில் குதித்துள்ளனர். ஆனால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் இவர்களால் உடனடியாக நீந்தி கரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணன் தம்பிகள் 3 மூன்று பேரும் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாயமான சம்பவம் மரக்காணம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் மரக்காணம் போலீசார்  மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர்.


இவர்கள் பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி மாயமான அண்ணன் தம்பிகள் மூன்று பேரையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நேற்று இரவு நேரம் என்பதால் இவர்கள் எங்கே உள்ளார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.


இந்த நிலையில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணன் லோகேஷ் உடல் மட்டும் தற்போது மீட்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வாங்கல மூலம் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக போலீசார் பிரேதத்தை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இரட்டையர்களான விக்ரம், சூர்யா ஆகியோரின் உடல்களை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீன் பிடிக்க சென்றபோது 3 இளைஞர்கள் தவறி விழுந்த சம்பவம் தற்போது மரக்காணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.