விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி, ஏனாதிமங்கலத்தில், எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கு விவசாய பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.


அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள் ஏனாதிமங்கலம் மற்றும் சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949 - 1950 ஆம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.


2021 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டினை புனரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் அனைத்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


அதனடிப்படையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் துயர்துடைக்கும் வண்ணம் சேதமடைந்த அணைக்கட்டினை புதியதாக கட்டிக்கொடுத்திடும் வகையில் 2023 - 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூ.86.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். உடனடியாக புதிய அணை கட்டுவதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒருமாதத்திற்குள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்  எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.


எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் நீர் கொள்ளளவு 5 அடியாகும், தற்பொழுது 4 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. நீரினை வெளியேற்றும் விதமாக வலதுபுற பிரதான கால்வாய்களான எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், அணைக்கட்டினை சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்.


மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தடுப்புச்சுவர் வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், பாதுகாப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி  தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஏனாதிமங்கலத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டினை  அமைச்சர் முனைவர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.