விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு ஊராட்சி, முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, முதலியார்குப்பம் மற்றும் செட்டிநகரில் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்..., வானூர் ஊராட்சி ஒன்றியம், கழுபெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு, சுற்றுச்சுவர் அமைப்பது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல், பழைய கழிப்பறை கட்டிடத்தினை அகற்றி புதிய கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, சமையலறைக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர புதிய குடியிருப்பு வீடுகள்
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் , விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தனி வீட்டிற்கும் ரூ.5,31,750/- என 4 ஒருங்கிணைந்த குடியிருப்பு தொகுப்பிற்கு ரூ.21,27,000/- என மொத்தம் 440 வீடுகள் கட்டுவதற்கு ரூ.23.4 கோடி மதிப்பிட்டில் 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒருங்கிணைந்த தொகுப்பு வீட்டிற்கு இடையில் 2.1 மீ இடைவெளியுடனும், 3.5 மீ சாலை வசதியுடன் வீடுகள் கட்டுமாப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்குடியிருப்பில் படுக்கை அறை, சமையலறை, முகப்பு அறை (ஹால்), பின்புறமும் தனித்தனியாக கழிப்பறை மற்றும் குளியலறை வசதியுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. குடியிருப்பு கட்டப்பட்டு வரும் பகுதி கடற்கரை ஒட்டிய பகுதி என்பதால் அதற்கேற்றாற்போல், சிமெண்ட், கம்பிகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
90 சதவீதம் நிறைவு
மேலும், இக்குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளில் மேல்நிலைநீர்த்தக்தொட்டி மூலம் குடிநீர் வசதி, பேவர் பிளாக் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, மின் கம்பம் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
அரசு பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு
தொடர்ந்து, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு, மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்துமிடம், உணவருந்தும் கட்டடம் தேர்வு இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவரினை சீரமைத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்
இதனைத் தொடர்ந்து, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், முதலியார்குப்பம் மற்றும் செட்டி நகரில், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் மீன்இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலியார் குப்பம் மற்றும் செட்டிநகர் மீன்பிடித் தொழிலில் முக்கிய மீனவ கிராமமாகும். முதலியார் குப்பம் மீனவ கிராமத்தில் 160 மீன்பிடி படகுகளும், 910 மீனவ மக்களும் மற்றும் செட்டி நகரில் 170 மீன்பிடி படகுகளும் 962 மீனவர்களும் உள்ளனர். இக்கிராமத்தில் மீன் இறங்குதள வசதி இல்லாததால், மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை திறந்த வெளியில் ஏலம் விடும் நிலை இருந்து வந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.7.0 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைத்திட உத்தரவிடப்பட்டதன் பேரில் பணிகள் துவங்கப்பட்டு 60 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
அந்த வகையில், முதலியார் குப்பத்தில், 1 மீன் வலை பின்னும் கூடம், 1 மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், 180 மீட்டர் உட்புற சாலை வசதி, 1 உயர்மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுபெறுவருகிறது. செட்டிநகரில், 1 மீன் வலை பின்னும் கூடம், 1 மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், 120 மீட்டர் உட்புற சாலை வசதி, 1 உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.