விழுப்புரம் : வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்…


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரிலும் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுரையின்பேரிலும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்


விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 1966 வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த வகையில் தேவைக்கேற்ப புதியதாக 02 வாக்குச் சாவடிகள் உருவாக்கம் செய்யவும், 02 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 12 வாக்குச் சாவடி மையங்களை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யவும் மற்றும் 4 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் ஆகியவற்றினை இறுதி செய்யும் பொருட்டு சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.


பாகம் எண்: 64 மற்றும் வார்டு எண்: 8 - பாகம் 83 ஆகிய வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். எனவே, பாகம் எண் 64-ஆனது இரண்டாக உருவாக்கப்பட்டு பாகம் எண்: 64 மற்றும் பாகம் எண் 65-ஆகவும், பாகம் எண் 84 ஆனது இரண்டாக உருவாக்கப்பட்டு பாகம் எண் 84 மற்றும் பாகம் எண் 85-ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில், வார்டு எண்: 28


வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1968


இம்மாறுதலுக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1968 ஆகும். மேலும் 01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளது.


புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் எனவும், இதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஜனவரி1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திடும் வகையில் 17 வயது நிரம்பிய நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.


100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி


விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தற்போது 100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி கணக்கெடுப்பிற்கு வரும்போது பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.