விழுப்புரம் : விக்கிரவாண்டி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு இயந்திரம் வெடித்து 20 நாள் சிகிச்சை பெற்று வந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர், விக்கிரவாண்டி பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் 23-ம் தேதி கொசு மருந்து அடித்தபோது, கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக வெடித்து, இவர் விபத்துக்குள்ளானார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான ராதாபுரத்திற்கு கொண்டு வந்தபோது, உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்ககோரி, விக்கிரவாண்டி - புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள ராதாபுரத்தில் இறந்தவரின் சடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இரவில் நடைபெற்ற இந்த மறியலால் அவ்வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்எல்ஏ விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக சார்பாக 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.