புதுவையில் கொரோனா முடிவுக்கு பின் வந்த முதல் ஆயுதபூஜை என்பதால், பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி பூஜைப் பொருட்கள் வாங்க வந்த மக்களின் கூட்டம் கடை வீதியில் அலைமோதினர். புதுச்சேரி பெரிய மார்க்கெட், நேருவீதி, புஸ்சி வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, உழவர்சந்தை, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர். சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.50, பொரி பாக்கெட் ரூ.10 முதல் ரூ.30 வரை, திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.100, சிறியது ரூ.50, 1 கிலோ வாழைப்பழங்கள் தரத்திற்கு ஏற்ப ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை, தேங்காய் ரூ.15 முதல் ரூ.30 வரை என விற்பனை செய்யப்பட்டது.


ஒரு வாழை இலை ரூ.5, ஆப்பிள் கிலோ ரூ.80 முதல் ரூ.140 வரை, சாத்துக்குடி ரூ.50, மாதுளை ரூ.80, பொட்டுக்கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.100, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120 என விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ மல்லி ரூ.800, கனகாம்பரம் ரூ.800, முல்லை ரூ.600, ரோஜா ரூ.160, சாமந்தி ரூ.300, அரளி ரூ.600-க்கு விற்பனை ஆனது. ஆயுத பூஜையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே புதிதாக கடைகள் வந்துள்ளன. பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் நேருவீதி, காந்திவீதி, புஸ்சி வீதி, அண்ணாசாலை, வழுதாவூர் சாலை, முதலியார்பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகளிடம் கூறியதாவது:- புதுவையில் கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கடைகளில் பொருட்கள் விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது கொரோனாவுக்கு முடிவு வந்த நிலையில் இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகையை முன்னிட்டு பொருட்கள், பழங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் அதிக அளவில் வந்து வாங்கி செல்கின்றனர் என்றார். இதேபோல் காரைக்காலில் ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் களைகட்டியது. பழங்கள், பூக்கள், காய்கறிகள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.