விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இருவர் விஷ சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் அருகிலுள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின, ஜெகதீஷ் ஆகிய இருவரும் கடந்த 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் சாராயம் குடித்துள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பிய நிலையில், இருவருக்கும் வயிற்று எரிச்சல், வாந்தி, மயக்கம் என உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சதீஷ்குமார், சுப்ரமணியன் இருவர் ஏற்கனவே விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஜிப்மரில் 4 பேர் கவலைக்கிடம் 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு புதன்கிழமை மாலை 19 பேர் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில்  தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷ் என்பவருக்கு பாதுகாவலராக (attender) செல்வம் (45) என்பவர் வந்துள்ளார். அவரும் அன்றைய தினம் மகேஷ் உடன் விஷ சாராயம் அருந்தியுள்ளார்.

 

ஆனால் அது குறித்து அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மகேஷ் உடன் மருத்துவமனைக்கு  வந்து போது மகேஷ்க்கு அளிக்கப்பட்ட  சிகிச்சைகளை பார்த்து பயந்து போனவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஒரமாக அமர்ந்துள்ளார் கடந்த 48 மணி நேரத்தில் விஷத்தன்மை தன் உடம்பில் அதிகமானதை  அடுத்து நேற்று காலை செல்வம் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அவர் கவலை கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதனால் தற்போது அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் நான்கு பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்:


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளில் கிடுகிடுவென உயர்ந்த பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. மூன்றவாது நாளான நேற்றைய நாளின் முடிவில் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.