விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் தண்டபாணி (22) பிறந்தநாளை அவருடைய நண்பர்கள் மாட்டு சாணம் கரைத்து அவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்து நோய் நொடிய அண்டாமல் வாழ வேண்டும் என வாழ்த்திய வீடியோ வைரலானது.


தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக வீடுகளில் உற்றார் உறவினர், குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன்,கோவிலுக்குச் சென்று சாமியை வழிபடுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், சமீப காலமாக, ஒருசில இளைஞர்கள், தங்களது நண்பர்களுடன் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு, கேக் வெட்டி கொண்டாடுவதும், அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதுபோன்று ஆயுதங்களைக் கொண்டு, கேக் வெட்டி கொண்டாடியவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்த சம்பவங்களும் நடந்துள்ளது.


இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிறுகடம்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணியின் பிறந்தநாளை, அவருடைய நண்பர்கள் வினோதமாக கொண்டாடி உள்ளனர். அதாவது, தண்டபாணியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து, மாட்டு சாணத்தை கரைத்து, தண்டபாணியை  தரையில் அமர வைத்து, அவர் மீது அதனை ஊற்றி அபிஷேகம் செய்து, நோய் நொடி அண்டாமல் நீடுழி வாழ வேண்டுமென வாழ்த்தி உள்ளனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.