விழுப்புரத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தில் பங்கேற்க ஆட்களை ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, விழுப்புரத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், கூட்டத்தைச் சேர்ப்பதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்தும் திமுக பிரமுகர்களால் டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி விழுப்புரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


அதன்படி, சின்னத்தச்சூர் கிராமத்தில் இருந்து 30க்கும் மேற்பட்டோருக்கு பணம் கொடுத்து விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து சென்ற டாடா ஏஸ் வாகனம், தென்பேர் என்ற இடத்தில் வந்த போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணம் செய்த சின்னத்தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவர் அருள் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


விபத்து குறித்து தகவலறிந்ததும் பெரியத்தச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததே டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கி இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கூட்டத்தைச் சேர்ப்பதற்காக இது போன்று பணம் கொடுத்து அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்களை தடுத்து அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.