விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேலமேடு கிராமத்தில் ஆரம்ப பள்ளி இடிக்கபட்ட நிலையில் மாற்று இடமாக வீட்டில் இயங்குவதால் கழிவறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேலமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது.  வேட்டப்பூர், ராமானுஜபுரம், மேலமேடு ஆகிய மூன்று கிராம மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் 1972 ஆம் ஆண்டு மேலமேடு கிராமத்தில் துவங்கப்பட்டு சேதமடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன் முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் கல்வி கற்பதற்கான எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் பள்ளி கட்டிடத்தை இடித்துள்ளனர். தற்போது அக்கிராமத்தில் உள்ள மணிகண்டன் என்பவரது வீட்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு தலைமை ஆசிரியை , ஒரு ஆசிரியர் இருக்க,  23 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.


கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால்  பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு  2 மாதங்கள் ஆகியும் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளாததால் போதிய இட வசதியில்லாததாலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் சத்துணவு கூடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பள்ளி இயங்குவதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கல்வித்துறையில் அலட்சியத்தால் கிராம புற மாணவர்களின் கல்வி கேள்விக்குரியாகியுள்ளது. மழை காரணமாக மேலமேடு கிராம பகுதியில் இயங்கும் அரசு  பள்ளி மாணவர்களுக்கு விரைந்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு கழிவறை வசதி போதிய அளவில் செய்யப்படாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.