விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாணவி


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் - பூங்கொடி என்பவரின் மகள் சுபஸ்ரீக்கு வாய் மற்றும் காது கேளாத குறைபாடு உள்ளது. இந்த மாற்று திறனாளி மாணவியான சுபஸ்ரீ  பி. என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12 - ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் எட்டு வயது முதல் 17 வயது வரை தொடர்ச்சியாக ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என கடுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார்.

விடாமுயற்சியால் வெற்றிகளை குவித்த சுபஸ்ரீ


இவர் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு M.R.I.C.R.C அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் போது மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கங்ளை அள்ளி குவித்தார். அதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு சென்னையில் நடந்த சி.எம். டிராபி தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து 50 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றார். அதன் தொடர்ச்சியாக சுபஸ்ரீயின் விடாமுயற்சியால் 2023 அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்கான இந்திய தடகள அணிக்கான தேர்வு போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 13.77 செகண்ட்ஸ் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை1.16 செகண்ட்ஸில் தேர்வு பெற்றார். 

 

இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் வெற்றி பெற வேண்டும் என கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்தார். காலை 2 மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த மாணவிக்கு முன்னாள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், ராஜேஷ்,சோபியா, தமிழரசு ஆகிய பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.

 

தொடர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் 


 

இந்த பயிற்சியின் பலனாக மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 05, 06- 12 -2024 ஆகிய நாட்களில் நடைபெற்ற 10- வது சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில், 4×400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று, இந்தியாவிற்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

உற்சாக நடனமாடியும் மலர் தூவியும் வரவேற்பு


இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவியை வரவேற்கும் விதமாக, ஊர்வலமாக மாணவியை வரவேற்று, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக நடனமாடியும் மலர் தூவியும் வரவேற்றனர். இந்த வெற்றியை குறித்து சுபஸ்ரீ பெற்றோர்கள் தெரிவிக்கையில், எந்த கஷ்டம் வந்தாலும் எல்லா சூழ்நிலையும் தாண்டி ஓட்டப்பந்தயத்திற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  தற்போது சர்வதேச அளவில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் கண்டிப்பாக சுபஸ்ரீ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு அதிலும் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.