விழுப்புரம்: “சேரி” மொழியில் தன்னால் பேச முடியாது என X தளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியினர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான  குஷ்பு தனது X வலைதளத்தில் சேரி மொழியில் தன்னால் பேச முடியாது என்ற கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், பட்டியலின மக்களை இழிவு படுத்தும் விதமாகவும், சாதிய வன்மத்தோடு பதிவிட்டுள்ளதாகவும், பட்டியலின சமூக மக்களை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக சேரி மக்கள் பேசுகின்ற மொழி தீண்டதகாத மொழி என்று பொது வெளி தளத்தில் பதவிட்டுள்ள குஷ்பு மீது எஸ்சி, எஸ்சி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் இன்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விழுப்புரத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்கி நடிக்கும் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என இந்திய குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


’சேரி’ சர்ச்சை:


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அநாகரிகமான கருத்துகளை நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சூறாவளியை கிளப்பியது. இதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர், தேசிய மகளிர் ஆணையம் என அனைவரும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு, அதனை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.


முன்னதாக, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய தலைவரும், நடிகையுமான குஷ்பு  தெரிவித்திருந்தார். த்ரிஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வந்த குஷ்பு அதற்காகப் பயன்படுத்திய 'சேரி மொழி' என்ற வார்த்தையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளார். 


மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பு:


அதாவது, எக்ஸ் தளத்தில் குஷ்புவை சரமாரியாக ஒருவர்  கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதலளித்த குஷ்பு, "திமுகவினர் இப்படித்தான் மொழியை பயன்படுத்துகின்றனர். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் சேரி மொழியில் பேச முடியாது" என்று சொன்னதாக கூறப்படுகிறது.  சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்து உள்ளார் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  குஷ்புவின் இந்த பேச்சால் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குஷ்புவின் உருவ பொம்பையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த விஷயம் பூதாகரமாக மாறிய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, "சேரி என்பதை நான் வேறு அர்த்தத்தில் கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை கேட்காமல் நான் ஒரு வார்த்தைய சொன்னதற்காக என்னை கேட்கிறார்கள்.  நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை.  சேரி என்று கூறியதற்கு நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்