விழுப்புரம் : விழுப்புரம் நேருஜி சாலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் நகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியபோது, தனக்கு சொந்தமான இடமென பெண் ஒருவர் உரிமை கொண்டாடி நகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியதை கிழித்தெறிந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகர பகுதியான நேருஜி சாலையில் அமைந்துள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகம் அருகில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் சில மாதங்களுக்கு முன் அகற்றபட்டன. இந்த பகுதியில் கருப்பாயி என்ற மூதாட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தார். கோலியனூரான் வாய்க்கால் கரை பகுதி என்பதால் சில மாதங்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது இந்த இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கபட்டன. மூதாட்டியின் பேத்தி சிவகாமி தங்களுக்கு சொந்தமான இடம் என்று உரிமை கொண்டாடி வந்த நிலையில் இன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் சிவகாமி தரைகள் அமைத்து சுற்றி வேலி அமைத்துள்ளார்.
இதனையடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர் வேலி அமைக்ககூடாது, நகராட்சிக்கு சொந்தமான இடம் என்று நோட்டீஸ் ஒட்ட போலீசார் பாதுகாப்புடன் சென்று நோட்டீஸ் ஒட்டியபோது நோட்டீசை சிவகாமி மற்றும் அவரது மகன் கிழித்தெறிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நகரமாட்டோம் என்று கூறி கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து ஆறுமுகத்தையும் சிவகாமியையும் கைது செய்ய முற்றபட்டபோது சிவகாமி நேருஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். உடனே சிவகாமியை போலீசார் கைது செய்ய முயன்றபோது சிவகாமி போலீசாருடன் வரமாட்டேன் என்று கூறி கூச்சலிட்டு சண்டையிட்டதால் போலீசார் வலுக்கட்டாயமாக சிவகாமியை கைது செய்தனர். இச்சம்பவத்தால் நேருஜி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்