விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெல் கொள்முதல் நிலைய ஆய்வின் போது நானும் ஒரு விவசாயி குடும்பம் தான் என கூறி வயல்வெளியில் இறங்கி பார்த்தினிய செடிகளை களையெடுத்த கூட்டுறவு கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன் இலவச ரேஷன் அரிசி கடத்தலில் 11,166 வழக்குகள் போடப்பட்டு 15278 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது திடீரென வயல்வெளியில் இறங்கிய தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் விவசாயத்தில் பார்த்தினிய செடிகள் பயிர்களை வளரவிடாமல் அழிப்பதில் முக்கிய பங்காற்றுவதால் பார்த்தினிய செடிகள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டுமெனவும் நானும் ஒரு விவசாயி குடும்பம் தான் என கூறி பார்த்தினிய செடிகளை களையெடுத்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த கூட்டுறவு துறை தலைமைசெயலர் ராதாகிருஷ்ணன் தேவைக்கேற்ப 3500 நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக முதலமைச்சர் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும்  கூட்டுறவு வங்கிகடன் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் வழங்க இலக்கை எட்டி விட வேண்டுமெனவும் 13 லட்சம் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் தேசிய திட்டத்தில் 1.14 குடும்ப அட்டைகளும், மீதமுள்ள 1.04 கோடி அட்டைகள் உள்ளதாகவும் 2.64 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் 14.54 லட்சம் குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.  டிபிசியில் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இலவச ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 11,166 வழக்குகள் 15278 பேர் கைது செய்யபட்டு 135 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குகள் குறைவாக போட்டாலும் அரிசி கடத்தலுக்கு மூலமாக இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளிடமிருந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் மத்திய குழு தமிழகத்திற்கு வந்து 10 மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளதால் விரைவில் அதுகுறித்து ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.