புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர். விசாரனையில் திருமண செலவுக்காக அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.


விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஏழை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது40). இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திர பராமரிப்பாளராக உள்ளார்.  இவர் தனது உதவியாளர் ராஜாவுடன் புதுவை லெனின் வீதியில் உள்ள இந்தியா-1 ஏடிஎம் எந்திர பராமரிப்பு பணிக்காக சென்றார். அப்போது ஏடிஎம் எந்திரத்தின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைக்கும் அறை திறக்கப்படாததால் அதிலிருந்த பணம் தப்பியது.


இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது ஏ.டி.எம். அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த கன்னியாகுமரி மாங்கோடு பகுதியை சேர்ந்த அனு (வயது24) என்பவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே சொந்த ஊருக்கு செல்வதற்காக புதுவை பஸ்நிலைத்தில் நின்று கொண்டிருந்த அனுவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.


இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏடிஎம் எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கட்டிங் மிஷினை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனு அளித்த வாக்குமூலம் : புதுவைக்கு கடந்த 1 மாதங்கள் முன்பு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு திருமணத்திற்காக வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். திருமண செலவுக்காக பணத்தை ஏற்பாடு செய்யும்படி வீட்டில் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என யோசித்து வந்தேன். சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த கொள்ளை பற்றி அறிந்தேன்.. அதை போலவே நானும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். அதன்படி, நான் வேலை செய்யும் ஓட்டலில் உள்கட்டமைப்பு பணி நடந்து வந்தது. அதற்காக ஒரு சில எந்திரங்கள் இருந்தது. அதில் ஒரு கட்டிங் மிஷினை எடுத்து ஓட்டல் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் என்னால் பணத்தை எடுக்க முடியவில்லை. எனவே போலீசில் மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தில் தப்பிக்க நினைத்தபோது  சிக்கிக்கொண்டேன் என அவர் கூறியுள்ளார்.