விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மொராட்டாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் போலீசார்  லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஏற்படுத்தி வருகிறது.

மதுவிலக்கு சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்


விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள மொரட்டாண்டியில் புதுச்சேரி - திண்டிவனம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்கும் விதமாக மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், சுங்கச்சாவடியை கடக்கும் கனரக லாரி ஓட்டுனர்களிடம் மதுவிலக்கு போலீசார் மாமூல் (லஞ்சமாக பணம்) பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார் வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் சுங்கச்சாவடியை கடக்கும் கனரக லாரி ஓட்டுனரிடம் மதுவிலக்கு போலீசார் ஒருவர் பணம் பெறுவதை அங்கிருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். போலீசார் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 





ஆயுதப்படைக்கு மாற்றம்


இந்த நிலையில், சுங்கச்சாவடியில் அருகே மதுவிலக்கு சோதனைச்சாவடியின், காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் காவலர் அப்துல் ரபிக் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.