விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மீனவப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


குடும்ப பிரச்சனை 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58).  இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவரது குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஆறுமுகம் மற்றும்  பக்தவச்சலம் ஆகியோர் அப்பகுதி மீனவர் கிராம பஞ்சாயத்தார்களிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறியுள்ளனர்.


ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து


இவர்களது பிரச்னைகளை விசாரித்த அப்பகுதி மீனவ பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஆறுமுகத்தின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் இவர்களுக்கு ஊரில் உள்ள யாரும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட கொடுக்கக் கூடாது என கூறியுள்ளதாக கூறுகின்றனர்.


நடவடிக்கை எடுக்காத காவல் துறை 


இதுகுறித்து ஆறுமுகத்தின் குடும்பத்தினர் கடந்த 13 ஆம் தேதி எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரக்காணம் காவல் நிலையம் மரக்காணம் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.


தற்கொலை முயற்சி 


இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ஆறுமுகத்தின் மனைவி பார்வதி வயது 55. இவர்  இரவு விஷமருந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின்பு பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகிறனர்.


தற்கொலை செய்து கொள்வது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வல்ல. மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.



சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)