பொங்கல் தொகுப்புடன் கருப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி பன்னீர் கரும்புகளை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பிற்க்காக செங்கரும்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன் பேரில் குறிஞ்சிப்பாடி பகுதியான திம்மராவுத்தன் குப்பம் கிராமத்தில் செங்கரும்புகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வேளாண்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மூலமாக செங்கரும்புகளை அளவிட டேப் கொண்டு அளந்தனர், ஆறு அடி கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என ஆய்வின் போது அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் கரும்புகளை கொள்முதல் செய்வதில் கரார் காட்டுவதால், ஆறு அடிக்கு கீழே விளைந்த கரும்புகளை எப்படி விற்பனை செய்வது என தெரியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு ஒரு கரும்புக்கு ஏற்றும் கூலி, இறக்கு கூலி போக்குவரத்து செலவுகள் உட்பட 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்தது.
கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி அடுத்த சத்திரம் கிராமத்தில் காலை கரும்பை கொள்முதல் செய்ய வரவேண்டிய அதிகாரிகள் மாலை ஆகியும் கரும்பை கொள்முதல் செய்யவில்லை,அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு தான் எடுப்போம் எனவும், 33 ரூபாய்க்கு எடுக்க வேண்டிய கரும்புகள் 12.50, ரூபாய் 14 என குறைந்த விலைக்கு எடுக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கரும்புகள் தரம் இல்லாமலும்,உயரம் குறைவாக இருப்பதாகவும் என பல காரணங்களை கூறி வருவதாகவும் விவசாயிகள் கதறி அழுத்தனர்.
அதிகாரிகள் கொள்முதல் செய்ய வருவதாக கூறிய நிலையில் மாவட்ட நிர்வாகத்தை நம்பி வேலை ஆட்களை கொண்டு கரும்பை வெட்டி வைத்திருப்பதாகவும், தற்போதைய அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழிப்பது கருப்பு விவசாயிகளில் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
இனிக்கும் கரும்பை விளைவித்த கரும்பு விவசாயிகளின் வாழ்வு இனிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சொந்த தொகுதியில் இந்த பிரச்சனை இருப்பதால் மற்ற மாவட்டங்களில் கரும்பு அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என கடலூர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றன.