விழுப்புரம்: மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தினால் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் வயல் வெளிக்கு சென்ற போது மின்சார தாக்கி உயிரிழந்ததால் மின்வாரிய அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


விழுப்புரம் அருகேயுள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி கலைவானி கடந்த 23.02.24 ஆம் தேதி வீட்டின் அருகேயுள்ள கரும்பு தோட்டத்திற்குள் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கரும்பு தோட்டத்திற்குள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலையே மின்சாரம் தாக்கி உள்ளது. இதனையடுத்து கலையானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க கோரிக்கை 


இந்த விபத்து தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்குள் மின்சார உயர்மின்னழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக ஏற்கனவே கண்னையன் மின்சார வாரிய அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.