விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வயல்வெளி பம்ப்செட் மோட்டாரில் குளித்துக் கொண்டிருந்த 6 மற்றும் 3ம் வகுப்பு   இரண்டு பள்ளி சிறுவர்கள் மீது மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் - விஜயலட்சுமி. இவர்களின் மகன் சப்தகிரி (11). இவர் 6ம் வகுப்பு தடுத்தாட்கொண்டூர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கலியபெருமாள்-சூர்யா இவர்களின்  மகன் லோகேஷ் (8). இவர் தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். (சூர்யா அக்கா வினோத் தம்பி  இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்).

 

இந்த நிலையில், இன்று மதியம் 1.50 மணியளவில் தடுத்தாட்கொண்டூர் வயல்வெளியில் உள்ள பம்ப்செட் நீர் மோட்டாரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பி அறுந்து இவர்கள் மேல் விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்பதற்குள் அவர்கள் உயிர் பிரிந்து விட்டது. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் ராஜ்குமார், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல்இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு சிறுவர்களின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த மின்சார கம்பி அருந்து விழும் நிலையில் உள்ளது என பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து இருந்தனர். பழைய மின்கம்பி என்பதால் காலையில் அறுந்து கிடந்துள்ளது. அப்போது அதை சரி செய்து விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மின்கம்பி இன்று மதியம் அறுந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சிறுவர்கள் வயல்வெளியில் குளித்த போது மின் கம்பி அறுந்து விழுந்து சிறுவர்கள்  இறந்து போன சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.